முற்காலத்தில் புழல் பகுதியை வாணன், ஓணன், காந்தன் என்ற குறும்பர்கள் கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தனர். அவர்களுடன் போராட வந்த தொண்டை நாட்டு மன்னன் அதியமானை இவர்கள் சண்டையில் புறமுதுகிட்டு ஓடச்செய்தனர். மனம் வருந்திய மன்னன் தனது யானையின்மீது திரும்பி வரும்போது முல்லை வனமாக இருந்த இத்தலத்தில் முல்லைக்கொடியில் யானையின் பாதம் சிக்கிக் கொண்டது.
கொடியை வாளால் வெட்டிய மன்னன் இரத்தம் வருவதைக் கண்டு மன்னன் பதறியபடி கீழே இறங்கினான். அங்கே சிவபெருமான் லிங்க வடிவில் இருப்பதைக் கண்டு துடித்து, வாளால் தனது தலையை வெட்டிக்கொள்ள முனைந்தான். இறைவன் காட்சி தந்து அவனைத் தடுத்து, தாம் வெட்டுப்பட்டாலும் 'மாசிலாமணியே' என்று திருவாய் மொழிந்தருளி, இவ்விடத்தில் ஒரு ஆலயம் அமைக்க அருள்புரிந்தார்.
மேலும் தனது வாகனமான நந்திதேவரை மன்னனுடன் அனுப்பி குறும்பர்களை அழித்தார். எனவே இத்தலத்தில் நந்தி தேவர் திரும்பிய நிலையில் இருக்கிறார். மன்னன் வெற்றியின் சின்னமாக அங்கிருந்த வெள்ளெருக்குத் தூண்களைக் கொண்டு வந்து கோயில் கட்டினான். மன்னன் வாளால் வெட்டிய அடையாளம் தற்போதும் சிவலிங்கத்தில் உள்ளது. எனவே சந்தனக்காப்புடன் இறைவன் காட்சியளிக்கின்றார்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்திற்கு முன் இரண்டு நாட்கள் சந்தனக் காப்புக் களைக்கப்பட்டு இறைவன் காட்சி தருகிறார். சதய நட்சத்திரத்தன்று மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்படும் என்று கோயிலின் தலைமை சிவாச்சாரியாரான தர்மேஸ்வர சிவாச்சாரியார் தொரிவிக்கிறார்.
இத்தலத்து இறைவி கொடியிடை நாயகி ஞான சக்தியாக அழைக்கப்படுகிறார். பௌர்ணமி, வெள்ளிக்கிழமை இரண்டும் சேர்ந்து வரும் நாளில் மேலூர் திருவுடை அம்மனை காலை நேரத்திலும், திருவொற்றியூர் வடிவுடை அம்மனை மதிய நேரத்திலும், இத்தலத்து கொடியிடை அம்மனை மாலை நேரத்திலும் வணங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள விநாயகப் பெருமான் வலம்புரி விநாயகராக காட்சி தருகிறார். மேலும் விநாயகர் மகாபாரதம் எழுதியபோது தனது தந்தத்தை உடைத்து எழுதியதால் இத்தலத்து விநாயகப் பெருமான் வலது தந்தம் இல்லாமல் காட்சி தருகிறார்.
திருவொற்றியூரில் தான் செய்த சத்தியத்தை மீறியதால் இரு கண்களையும் இழந்த சுந்தரர் இத்தலத்து இறைவனைத்தான் முதலில் பாடினார்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
இத்தலத்தை இந்திரன், சூரியன், சந்திரன், லவகுசர், பிருகு முனிவர், துர்வாசர், தேவமித்ரன், சம்புதாசர், சித்ரபர்மன் போன்ர் வழிபட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. |